சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றம், உளவு, நுண்ணறிவு, போக்குவரத்து, கடலோரப் பாதுகாப்பு, முதல்வர் பாதுகாப்பு, சிலை கடத்தல் தடுப்பு, பொருளாதாரக் குற்றப் பிரிவு உள்பட 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவற்றில், குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிபிசிஐடி) முக்கியத்துவம் வாய்ந்தது. சர்ச்சை மரணங்கள், பதற்றமான வழக்குகள், நாட்டையே உலுக்கிய சம்பவங்கள், போலீஸார் மீதே எழும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர்.
பல நேரங்களில் ‘‘சட்டம்-ஒழுங்கு போலீஸார் மீது நம்பிக்கை இல்லை, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுப்பார்கள். சில நேரங்களில் நீதிமன்றமும் இந்த உத்தரவைப் பிறப்பிக்கும்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு, அமைச்சர் நேருவின் தம்பிராமஜெயம் கொலை வழக்கு, நெல்லை மாவட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய காவல் அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு, கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு, அன்புஜோதி ஆசிரம வழக்கு, புதுக்கோட்டையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகலக்கப்பட்ட வழக்கு என தமிழகம் முழுவதும் சுமார் 400 வழக்குகள் சிபிசிஐடி வசமுள்ளதாக கூறப்படுகிறது.
பெரும்பாலான வழக்குகள் விசாரணை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. இது பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பல வழக்குகளில் விசாரணை நீண்டுகொண்டே செல்வதற்கு, திறமையான விசாரணை அதிகாரிகள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதுதான் முக்கியக் காரணம். மேலும், பல அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நீடிக்கின்றனர்.
விசாரணை அதிகாரிகள் சிலருக்கு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையைகூட சமர்ப்பிக்கத் தெரிவதில்லை. இதனால், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுகிறது.
மேலும், போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லை. 2022-23 நிலவரப்படி சிபிசிஐடி பிரிவில் 893 போலீஸார் மட்டுமே உள்ளனர். இதனால், விசாரணை செய்வது, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, போதுமான திறமையின்றி, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய வேண்டும். துடிப்புடன் செயல்படும் திறமையான போலீஸாரை சிபிசிஐடி பிரிவில் நியமிக்க வேண்டும்’’ என்றனர்.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மோசடி செய்த நிதி நிறுவன வழக்குகளை விசாரித்து வந்தபொருளாதாரக் குற்றப் பிரிவு விசாரணை அதிகாரிகள், குற்றச்சாட்டுக்கு உள்ளான நிறுவனத்திடமே லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அதிகாரிகள் அனைவரையும் மாற்றிய டிஜிபி, அந்தப் பிரிவுக்கு கூடுதலாக போலீஸாரை நியமித்தார். அதேபோல, சிபிசிஐடி பிரிவிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.