போதைப் பொருளின் கேடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் காவல் கண்காணிப்பாளர் திரு ஹர்ஷ் ஷிங் இகாப அவர்கள் மற்றும், துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு ணி.பாலகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட காவலர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர பேரணியில் ஈடுபட்டனர்.
அண்ணா சிலை, கடைத்தெரு, எல்ஐசி, பப்ளிக் ஆபிஸ் சாலை, வழியாக பேரணியாக வந்த காவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நாகூர் வரை இருசக்கர பேரணியாக சென்ற அவர்கள், தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானாவில் நிறைவு செய்தனர்.