மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.
மேடவாக்கத்தில், அனு பிரியா, அவரது தந்தை செல்வராஜ், தாய் மகேஸ்வரி இருவரும் அனுபிரியாஉடன் தங்கி உள்ளனர். கடந்த 4ம் தேதி, வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து புகுந்த மர்ம நபர், வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று நோட்டமிட்டார்.
சத்தம் கேட்டு மகேஸ்வரி வீட்டிற்கு வெளியே வந்தார். அவரிடம் கத்தி முனையில் தங்க சங்கிலியை பறிக்க மர்ம நபர் முயற்சித்துள்ளான். மகேஸ்வரி கத்தி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த மகேஸ்வரியின் கணவர் செல்வராஜ், மர்ம நபரைப் பிடிக்க முயற்சித்தபோது, தன்னிடமிருந்த கத்தியால் செல்வராஜின் தலை, கழுத்து, முதுகு பகுதியில் குத்தியுள்ளான். தடுக்க வந்த மகேஸ்வரியும் கத்தியால் குத்தப்பட்டார்.
பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த மகள் அனுபிரியா, கூச்சலிட்டபடியே, அக்கம் பக்கத்தினரை அழைத்து உள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்தனர். காயமடைந்த தம்பதியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதற்கட்ட விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது, வடமாநில இளைஞர் என, தெரியவந்தது.
தொடர் விசாரணையில், குற்றவாளி ரயிலில், பீஹார் மாநிலத்திற்கு செல்வது தெரியவர, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் பரமசிவம், முதல் நிலை காவலர் செல்வகுமார், முகிலன் ஆகியோர் விமானம் மூலம் பீஹார் சென்று, ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய மர்ம நபரை, அங்கேயே மடக்கிப் பிடித்து, பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அந்த மர்ம நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிதேவ் சவுத்ரி, 26, என, தெரிய வந்தது. இதையடுத்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிதேவ், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
