மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி போலீஸ் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிச் செல்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் உத்தரவிட்டுள்ளார்.
வாகனங்களை போலீசார் சோதனையிடாமல் இருக்கவும், அவ்வாறு சோதனையிட்டால் அவர்களிடம் இருந்து தப்பிக்கவும், தங்களது கார் அல்லது இரு சக்கர வாகனங்களில் போலீஸ், பிரஸ், வக்கீல், டாக்டர் என்று ஒட்டி வருகின்றனர். பெரும்பாலும், போலீஸ், பிரஸ், வக்கீல் ஸ்டிக்கர்தான் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டியவர்களில் பெரும்பாலானவர்களுக்கும், அந்தப் பணிக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. போலீஸ் அல்லது பத்திரிகை அல்லது வக்கீல் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் கூட போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க ஸ்டிக்கர்களை ஒட்டி வருகின்றனர்.
இது குறித்து மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சிலர் ‘போலீஸ்’ ஸ்டிக்கர்களை ஒட்டி வருவது தெரியவந்துள்ளது. தேச விரோதிகள், குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டோர் போலீஸ் ஸ்டிக்கரை தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. இதனால் பெரும் பாதுகாப்பு பிரச்னை உருவாகும். தவிர, வாகன சோதனையின்போது, இதுபோல் ‘போலீஸ்’ ஸ்டிக்கர்களை ஒட்டி வருபவர்களை கண்டு அவர்களிடம் சோதனை நடத்த போலீசார் தயங்குகின்றனர். உண்மையான போலீஸ் அதிகாரிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் வருவது தான் இதற்கு காரணமாக அமைகிறது.
‘போலீஸ்’ ஸ்டிக்கரை பயன்படுத்தி மோசடி மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, எந்த ஒரு தனியார் வாகனத்திலும் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால், அதில் பயணிப்பவர் யாராக இருந்தாலும் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
அதேபோல பல குற்றவாளிகள் பிரஸ் என்ற பெயரில் வாகனங்களில் வலம் வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. அதையும் போலீஸ் அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.