புதுக்கோட்டை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தி அவர்களை கைது செய்யும்படி எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவிட்டார். அதன்பேரில் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை, மாவட்டம் அறந்தாங்கி சப்டிவிஷனில் வரும் அறந்தாங்கி காவல் நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராய வழக்கில் தென்னரசு என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றம் அழைத்து செல்லும் போது போலீசாரிடம் இருந்து தப்பித்துச் சென்று விட்டார்.
எஸ்பி வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தென்னரசுவை பிடிக்க அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். தென்னரசு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே போல் சிலட்டூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் 27 ஆண்டுகளாக வழக்கு ஒன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவர் போலீசுக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார். அவரை இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் டீம் தேடி வந்தனர்.
தற்போது அவர் மீண்டும் அவர் அறந்தாங்கிக்கு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய போலீசார் சென்ற போது சிதம்பரம் கோர்ட்டில் சரணடைந்தார். நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்த சிறந்த காவல் பணிக்காக அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை எஸ்பி வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.