தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.
பின்னர், தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.
வாகனத்தில் இருந்து விஜயகாந்தின் உடலை காவல் துறையினர் சுமந்து வந்தனர். பின்னர் சரியாக மாலை 6 மணிக்கு காவல் துறையினர் விஜயகாந்தின் உடலுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தனர். பின்னர், 72 குண்டுகள் வான் நோக்கி சுடப்பட்டு, வாத்தியங்கள் முழங்க விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகபாண்டியன் மற்றும் உறவினர்கள் விஜயகாந்தின் உடலைச் சுற்றிவந்து இறுதிச் சடங்களை செய்தனர். குடும்ப வழக்கப்படியான சில சடங்குகளும் செய்யப்பட்டன. 7 மணியளவில் விஜயகாந்தின் உடல் குழியில் இறக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஏற்கெனவே, இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தின் வெளியே ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இதனிடையே இறுதி ஊர்வத்தில் வந்த மக்கள் கூட்டமும் சேர்ந்துவிட, அந்தப்பகுதியில் கூட்டம் அதிகமானது. முன்னதாக, அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த மக்கள், தங்கள் செல்போன் விளக்குகளை எரியவிட்டு விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர்.