திருச்சி மாநகரம், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலூர் ரோட்டில் காவல் சோதனை சாவடி எண்.8 அமைக்கப்பட்டு, பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வயலூர் ரோடு சாலை விரிவாக்கத்திற்கு பின்னர் புதியதாக காவல் சோதனை சாவடி எண்.8 அமைப்பதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி இடம் தேர்வு செய்யப்பட்டு, புதியதாக கட்டிடம் கட்டுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த சோதனை சாவடி கட்டிடத்தில், வயலூர் ரோடு வழியாக திருச்சி மாநகருக்குள் வரும் மற்றும் மாநகரிலிருந்து வெளியேறும் வாகனங்களை பதிவு செய்யும் விதமாக 2 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எந்த ஒரு தகவலையும் உடனடியாக தெரிவிக்க மைக் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சோதனை சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் தணிக்கை செய்யவும், சாலையில் விபத்துக்களையும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர்களுடன் (Reflective stickers) கூடிய இரும்பு தடுப்பான்களுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த நவீன காவல் சோதனை சாவடி எண்-8-ன் புதிய கட்டிடத்தை, 04.03.2024-ம்தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இச்சோதனை சாவடியில் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் வாகன தணிக்கை செய்யப்படும்.
இந்த அதிநவீன காவல் சோதனை சாவடி எண்-8 செயல்பாட்டிற்கு வந்துள்ளதால், திருச்சி மாநகருக்குள் உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியேறும் வாகனங்களை தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு, குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை வாகன சோதனை மூலம் பிடிக்கவும், சட்ட விரோத நபர்களை கண்காணிக்கவும், அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உய்யக்கொண்டான் திருமலை, குமரன்நகர், வாசன்சிட்டி, குழுமிக்கரை ஆகிய இடங்களில் நடைபெறும் குற்றசம்பவங்களை தடுக்க ஏதுவாக அமைந்துள்ளது என மாநகர காவல் ஆணையர் அவர்களால் தெரிவித்துகொள்ளப்படுகிறது.
திருச்சி மாநகரத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகருக்குள் வரும் வாகனங்களையும், மாநகரை விட்டு வெளியேறும் வாகனங்களையும் தணிக்கை செய்வதற்காக திருச்சி மாநகரத்தின் எல்லைகளை சுற்றி மொத்தம் 9 காவல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ள கொள்ளபட்டு வருகிறது.