சென்னை மீனம்பாக்கம், சர்வதேச விமான நிலைய வளாகத்தில் `விமான நிலைய காவல்- ரோந்து’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் உடன் வருவோர், அவர்களது உடைமைகளைப் பாதுகாக்க, சென்னை பெருநகர காவல் துறையின் புதிய முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, 10 காவலர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்துக்கென 2 பிரத்யேக ரோந்து வாகனம் மற்றும் ஒரு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது, தனி சீருடையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனத்தில் நவீன சாதனங்களுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும், வயதான பயணிகள், வெளிநாட்டு நபர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் போலீஸார் செய்வார்கள். இதனால் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும்.
மேலும், புதிதாக வரும் பயணிகளுக்கு டாக்சி வாகன உதவி, அவசர உதவி போன்றவை கிடைக்கவும் வழிகாட்டவும், விமான நிலைய காவல்-ரோந்து போலீஸார் பணியாற்றுவதால், பயணிகளை ஏமாற்றும் மோசடி நபர்களிடமிருந்து பயணிகள் பாதுகாக்கப்படுவர் என்றார். மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்ட விமானநிலைய காவல் ரோந்து போலீஸார் 10 பேருக்கு சிறப்பு பேட்ஜ்களையும் காவல் ஆணையர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் சி.வி.தீபக், காவல் கூடுதல் ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா (தெற்கு), இணைஆணையர்கள் எம்.ஆர்.சிபிசக்ரவர்த்தி, மகேஷ் குமார் (போக்குவரத்து), துணை ஆணையர் சுதாகர்,மத்திய தொழிற் பாதுகாப்புப் படை துணைத் தலைவர் ஸ்ரீராம் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.