ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்தில் ஆவடி காவல் ஆணையாளரின் உத்தரவின் படி 30.04.2024 அன்று இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் செல்லுதல் மற்றும் மூவர் செல்லுதல் ஆகிய இரு இனங்களின் கீழ் சிறப்பு வாகன தணிக்கை ஆவடி, பட்டாபிராம், பூந்தமல்லி, SRMC, நசரத்பேட்டை அம்பத்தூர், செங்குன்றம், எண்ணூர், மணலி, உள்ளிட்ட 16 இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
மேற்கண்ட வாகன தணிக்கையில் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த 610 வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்த 33 வாகன ஓட்டிகள், மற்றும் இதர போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த வாகனத் தணிக்கை செய்யப்படும் இடங்களை காவல் உயர் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கினர். சாலை விபத்துகளை தவிர்க்கவும், உயிரிழப்புகளை தடுக்கவும் இவ்வாறான சிறப்பு வாகனத் தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
ஆவடி போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்ட வாகன தணிக்கையை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பல இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.