சென்னை, சாலிகிராமம், சாரதாம்மாள் தெருவில் வசிக்கும் மனோஜ்குமார் கடந்த 27.03.2024 அன்று இரவு, அவரது இருசக்கர வாகனத்தை மேற்படி வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு மறுநாள் (28.03.2024) காலை பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து, மனோஜ்குமார் R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி இருசக்கர வாகனத்தை திருடிய ஸ்ரீநாத், தீபன்குமார், தங்கராஜ் ஆகிய மூவரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் இவர்கள் மூவரும் சேர்ந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் உட்பட மாங்காடு, காஞ்சிபுரம், செய்யாறு மற்றும் வெள்ளவேடு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடியது தெரியவந்தது. அதன்பேரில், அவர்களிடமிருந்து புகார்தாரரின் இருசக்கர வாகனம் உட்பட 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும் (02.05.2024) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.