தமிழகத்தில் மக்களவை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் ஏதுவாக சுமார் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்கள்.
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்படுகிறது.
இதற்காக ஒரு வாக்கு எண்ணும் மையத்துக்கு சராசரியாக 1,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் சுமார் 40,000 போலீஸார் பணியில் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது, மாநிலம் முழுவதும் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் தடுப்பதற்கு 60,000 போலீஸார் ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள்.
வாக்கு எண்ணும் மையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான கட்டுப்பாட்டு அறையும், அங்குள்ள காவல் துறை தற்காலிக கட்டுப்பாட்டு அறையோடு இணைந்து செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்கள் அடையாள அட்டையைக் காண்பித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அதோடு மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் அவர்கள் சோதனை செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, முக்கியமான இடங்களிலும், சந்திப்புகளிலும் அதிரடிப்படையினர், அதிவிரைவுப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களின் அருகே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு, அந்தப் பகுதி கண்காணிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கும் வகையில் போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே ரோந்துப் பணியில் ஈடுபட வைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வட சென்னை மக்களவைத் தொகுதி வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதி வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, அங்கு சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் சென்னை பெருநகர காவல்துறையின் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, கிழக்கு மண்டல இணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் தலைமையில் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை பாதுகாப்புப் பணியில் 10 துணை ஆணையர்கள், 35 உதவி ஆணையர்கள், 70 காவல் ஆய்வாளர்கள் 120 உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்புப் பணிகளை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.