செங்கல்பட்டு: ஒத்திவாக்கத்தில் நடந்து வரும் அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்பட 9 பதக்கங்கள் குவித்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி-2024 செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என 30 அணிகளை சேர்ந்த சுமார் 453 துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாவது நாளான நேற்று, கைதுப்பாக்கி சுடும் போட்டி எண்.3, 40- 50 கஜம் ரன் மற்றும் ஷூட் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமை காவலர் பாரதி முதல் இடத்தையும், அசாம் ரைப்பிள்ஸ் வீராங்கனை ஜூலியா தேவி இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை உதவி ஆய்வாளர் சுதா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ரைபிள் சுடும் போட்டி எண்.3, 300 சுஜம் ப்ரோன் போட்டியில், அசாம் காவல்துறை வீராங்கனை காவலர் பிரியங்கா போரோ முதல் இடத்தையும், அசாம் ரைப்பிள்ஸ் வீராங்கனை காவலர் திவ்யா சைனி இரண்டாவது இடத்தையும், இந்தோ- திபெத்திய எல்லை காவல் படை வீராங்கனை காவலர் மம்தா ஒலி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
கைதுப்பாக்கி சுடும் போட்டி எண்.4, 50 கஜம் ஸ்னாப் ஷூட்டிங் ப்ரோன் பொசிஷன் போட்டியில், எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் பாராமிலா முதல் இடத்தையும், கர்நாடக காவல்துறை வீராங்கனை துணை காவல் கண்காணிப்பாளர் நிகிதா இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை தலைமை காவலர் பாரதி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
ரைபிள் சுடும் போட்டி எண்.4, 300 கஜம் ஸ்னாப் போட்டியில், உ.பி. காவல் துறை வீராங்கனை காவலர் சரோஜ் முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் சோனியா இரண்டாவது இடத்தையும், எல்லை பாதுகாப்பு படை வீராங்கனை காவலர் கஜோல் சவுத்ரி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
கார்பைன் சுடும் போட்டி எண்.1, 25 கஜம் பேட்டீல் கிரவுச் போட்டியில், இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வீராங்கனை காவலர் தேஜஸ்வரி முதல் இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் சுசி இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு காவல்துறை வீராங்கனை காவலர் கீதா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
கடந்த 2 நாட்களாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி ஒரு தங்கம் உள்பட 9 பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் டிஜிபி சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவல்துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சாதனை புரிந்து வருகின்றனர். இதைவிட மேலும் மேலும் சாதனை புரியவேண்டும். காவல்துறையில் பெண் காவலர்களின் பங்கு மிகப்பெரியது. அதற்கான முயற்சியை பெண் காவலர்கள் முன்னெடுக்க வேண்டும்’’ என்றார்.