திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்கைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சுதாகர் 44/24 என்பவர் வீரப்பூர் கிராமத்தில் மகாமுனி மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். கடந்த 01.07.2024-ஆம் தேதி கடையின் உரிமையாளர் சுதாகர் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா என்பவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது. அடையாளம் தெரியாத 5 நபர்கள் TN 77 D 9477 (போலி பதிவெண்) Mahindra XYLO காரில் வந்து, தாங்கள் வருமானவரி துறை அலுவலகத்தில் இருந்து சோதனை செய்ய வந்திருப்பதாக கூறினர்.
இதனைத்தொடர்ந்து மெடிக்கல் ஷாப்பில் சோதனை செய்து, கடையில் இருந்த சுதாகரை தாங்கள் வந்திருந்த காரில் அழைத்து கொண்டு திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மேற்படி நபர்கள் சுதாகர் குடும்பத்தாரிடம் தாங்கள் வருமானவரித்துறை மற்றும் சுகாதரத்துறை அதிகாரிகள் என அரசு துறைகளை மாற்றி மாற்றி கூறியதுடன் முதலில் 20 இலட்சம் பணம் தருமாறு பேரம் பேசி, பின் 10 இலட்சம் தருமாறு கேட்டதால், சுதாகரின் குடும்பத்திற்கு சந்தேகம் வந்ததின் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.மரியமுத்து மேற்பார்வையில் மணப்பாறை காவல் ஆய்வாளர் திரு.குணசேகரன், இராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் திரு. வீரமணி மற்றும் துறையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. செந்தில் குமார் ஆகியோர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு எதிரிகளை தேடப்பட்டு வந்தது.
இந்நிலையில் எதிரிகள் மஞ்சம்பட்டி அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரத விலாஸ் முறுக்கு கடையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் 1) நௌவ்ஷாத் 45/24, த/பெ முகமது, நெடுமங்காடு, திருவனந்தபுரம், கேரளா, 2) சேகர் 42/24, த/பெ பெருமாள், வைரசெட்டிபாளையம், உப்பிலியபுரம், திருச்சி மாவட்டம், 3) சுதாகர் 44/24, த/பெ கிருஷ்ணன், வளையப்பட்டி, உப்பிலியபுரம், (உப்பிலியபுரம் காவல் நிலைய DC HS.NO.24/21), 4) மாரிமுத்து 53/24, த/பெ. பெருமாள், கோசாகுளம், B.B.குளம் PO, மதுரை மாவட்டம். 5) வினோத் கங்காதரன் 37/24, த/பெ மாணிக்கம், ஆவடி, சென்னை மற்றும் சுதாகரை கடத்த உடந்தையாக இருந்த 6) கார்த்திகேயன் 37/24, த/பெ சோமசுந்தரம், தொப்பம்பட்டி, ஆளிப்பட்டி PO, மணப்பாறை தாலுகா, திருச்சி மாவட்டம் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த போது மேற்படி நபர்கள் பணம் பறிக்கும் எண்ணத்தில் சுதாகரை கடத்தியது தெரியவந்தது.
மேலும், மேற்படி எதிரிகளிடம் விசாரணை செய்த போது இதற்கு முன்பு இதே போன்று துறையூரில் உள்ள சௌடாம்பிகை அம்மன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் தாங்கள் வருமான வரித்துறையில் இருந்து வந்திருப்பதாக கூறி அங்கிருந்து 5.18 இலட்சம் பணம் மற்றும் 5 பவுன் நகை ஆகியவற்றினை எடுத்து சென்றதாகவும், மேலும் விசாரணையில் துறையூர் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த 1) சக்திவேல் 32/24, த/பெ நல்லுசாமி, தொப்பம்பட்டி, ஆளிப்பட்டி PO, மணப்பாறை தாலுகா மற்றும் 2) மணிகண்டன் 29/24, த/பெ மகாலிங்கம், திருவிடைமருதூர், கும்பகோணம் TK, தஞ்சாவூர் மாவட்டம் ஆகிய இருவரையும் தனிப்படைகள் மூலம் கைது செய்யப்பட்டனர். மேற்படி எதிரிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம், 5 பவுன் தங்க நகை, கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்திய Mahindra Xylo கார், இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் எதிரிகள் பயன்படுத்திய 8 கைபேசிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக மணப்பாறை கா.நி குற்ற எண். 3304/24 U/s 191(ii), 140(ii) 142 BNS-ன்படி வழக்கு பதிவு செய்தும், துறையூர் கா.நி குற்ற எண். 170/24, U/s. 170, 448, 420 IPC கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
மேலும், மேற்படி எதிரிகளுக்கு சென்னை, கோயம்புத்தூர், கடலூர், சேலம், திருப்பூர். வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திருட்டு, வழிப்பறி, ஆட்கடத்தல் மற்றும் அரசு பொதுதுறையின் பெயரினை பயன்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இது போன்று சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் நடப்பதாக சந்தேகம் எழும்பட்சத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண். 9487464651 என்ற எண்ணிற்கு தகவல் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.