கோவையைச் சேர்ந்த தங்கக் கட்டி வியாபாரி சுபாஷ் 40 என்பவர் கடந்த 16ஆம் தேதி பெங்களூர் சென்று தங்கக் கட்டிகளை விற்பனை செய்து பணத்தை எடுத்துக் கொண்டு குர்லா விரைவு வண்டியில் பெங்களூரில் இருந்து கோயமுத்தூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்த ரயில் திருப்பூரில் புறப்படும் பொழுது சுபாஷ் இடம் தகராறு செய்த நான்கு இளைஞர்கள் அவரது பையை திருடிக் கொண்டு இறங்கி விட்டனர்.
தனது பையில் 595 கிராம் தங்க கட்டி மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்ததால் இது தொடர்பாக சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் இறங்கினர். நான்கு தனிப்படைகள் அமைத்து தமிழ்நாடு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள ரயில் நிலையம் பேருந்து நிலையம் என 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை 400 மணி நேரம் ஆய்வு செய்து குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வன்பானி சாவன்(22), விஜய் குண்டாலக் (20), அமர்பாரத்(20), அன்கீத் சுபாஷ்(23), சைதன்யா விஜய்(20), கவுரவ் மாரூதி(19) என்ற 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 595 கிராம் தங்க நகை மற்றும் 8 லட்சத்து 46 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் புதிதாக வாங்கிய 50 ஆயிரம் மதிப்புடைய செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.