சென்னை, டி.பிசத்திரம் பகுதியைச்சேர்ந்த ரோகித் (எ) ரோகித் ராஜ், வ/34, த/பெ.செல்வம், என்பவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது. இவர் K-6 டி.பி சத்திரம் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி ஆவார்.
மேலும் இவர் மீது K-6 டி.பி சத்திரம், K-3 அமைந்தகரை மற்றும் R-3 அசோக்நகர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள 3 கொலை வழக்குகளில் பிடியாணைகள் நிலுவையிலுள்ளன. மேற்படி குற்றவாளியை பிடிக்க K-6 டி.பி சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் தீவிரமாக தேடிவந்தனர்.
மேற்படி குற்றவாளி ரோகித் (எ) ரோகித்ராஜ் கீழ்பாக்கம், பழைய கல்லறை பகுதியில் பதுங்கிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மேற்படி காவல் குழுவினர் இன்று (13.08.2024) அதிகாலை மேற்படி குற்றவாளியை பிடிக்க முற்பட்டபோது, எதிரி ரோகித் (எ) ரோகித் ராஜ் அருகில் இருந்த பீர்பாட்டிலை உடைத்து தலைமைக்காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். உடனே உதவி ஆய்வாளர் கலைச்செல்வி எச்சரிக்கை செய்து பிடிக்க முற்பட்ட போது, எதிரி ரோகித் (எ) ரோகித்ராஜ் உதவி ஆய்வாளரையும் தாக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் ரோகித் (எ) ரோகித்ராஜின் கால் முட்டியின் கீழ் சுட்டு பிடித்துள்ளார்.
காயடைந்த தலைமைக்காவலர்கள் சரவணக்குமார். பிரதீப் மற்றும் எதிரி ரோகித் (எ) ரோகித்ராஜ் ஆகிய மூவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டு கைது செய்த உதவி ஆய்வாளர் திருமதி.கலைச்செல்வியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.A.அருண், இ.கா.ப அவர்கள் இன்று (13.08.2024) நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.