பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செட்டியூர் கிராமம் தர்மராஜ் என்பவரின் மகன் கருணாகரன் சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு 25.07.2024ம் தேதியன்று காலை 06.00 மணியளவில் வீட்டின் காவலாளியிடம் சொல்லிவிட்டு கிளம்பி சென்றிருந்தார். 30.07.2024ம் தேதியன்று காவலாளி பேச்சிமுத்து கருணாகரனுக்கு வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே கருணாகரன் சென்னையில் இருந்து கிளம்பி வந்து 31.07.2024ம் தேதி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றதாகவும், கண்டுபிடித்து தரவேண்டி கொடுத்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. வழக்கின் எதிரியை தேடிவந்த நிலையில் கடந்த 20.08.2024ம் தேதியன்று கீழப்பாவூர், வணிகர் மேலத்தெருவில் உள்ள கணபதி என்பவரின் மகன் கோமதி சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் ஊரில் உள்ள கோவிலின் திருவிழாவிற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டு, திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றதாகவும் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டு, வழக்கின் எதிரியை கண்டுபிடிக்க வேண்டி புலன் விசாரணையில் இருந்த நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பந்தமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் உத்தரவின் அடிப்படையில், ஆலங்குளம் துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயபால் பர்னபாஸ் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அதி தொழில்நுட்ப உதவியோடு, மதுரை குருவிதுரையை சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் கணேசன் வயது- 39, கீழப்பாவூர் முருகேசன் என்பவரின் மகன் சங்கரராமன் வயது- 36, தஞ்சாவூர் மாவட்டம் எம்.சி.ரோடு, அண்ணாமலை நகரை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் ரமேஷ் வயது-42 மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி ஊரை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரின் மகன் செந்தில்குமார் வயது- 50 ஆகியோர் மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு திருடப்பட்டதாக தெரியவந்ததன் பேரில் மேற்படி நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்குகளில் காணாமல் போன 157 கிராம் தங்க நகைகள், ரூ.2,50,000/ பணம் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் மற்றும் செல்போன்கள் மொத்தம் ரூ. 20,00,000/ மதிப்புடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் இதில் தொடர்ச்சியாக புலன்விசாரணை செய்து மதுரை, கோவை, கரூர், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு சென்று எதிரிகளை தேடியும், அவர்களை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றி இரண்டு குற்ற வழக்குகளை கண்டுபிடித்த புலன்விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் செந்தில், சுரண்டை வட்டம், காவல் நிலைய பொறுப்பதிகாரி உமாமகேஸ்வரி, உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் தனிப்படை காவல் ஆளிநர்கள் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
காவல் சரகத்தில் உள்ள பொதுமக்கள் வீட்டினை பூட்டி விட்டு வெளியூருக்கு செல்லும் போது காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்லுமாறும், வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்துமாறும் அறிவுரை வழங்கினார்.