தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 19ந்தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரணம் பூதலூர் அருகே உள்ள கங்கை சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தன் மேல் டீசலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதுதான். உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர்.
நாம் அவரை சந்தித்த போது தெரிவித்ததாவது, நான் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை கல்லுக்குளம் பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளேன். வியாபாரத்திற்காக தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்த திரு.சந்தோஷ் அவர்களிடமிருந்து 3.5 இலட்சம் கடன் வாங்கினேன். அதற்காக தினமும் வட்டி கட்டி வருகிறேன் (அதாவது DDL வட்டி) ஆனால் கடந்த ஓரிரு மாதமாக போதிய வருவாய் இல்லாததால் வட்டி தொகை செலுத்த இயலவில்லை. அதனால் என்னிடமிருந்து எனது தொழிலுக்கு அடிப்படை ஆதாரமாக இருந்து TATA ACE மற்றும் எனது டூவீலர் வண்டியை தனது ஆட்களை கொண்டு எடுத்து சென்று விட்டார். மேலும் 10 இலட்சம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்த போது அவர்கள் நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிக்கின்றனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நான் தற்கொலைக்கு முயன்றேன் என்றார்.
இது பற்றி திரு. சந்தோஷ் அவர்களின் கருத்தை அறிய அவரது கைபேசியை தொடர்ந்து தொடர்பு கொண்டோம். ஆனால் “சுவிட்ச் ஆப்” என்று வந்து கொண்டே இருந்தது. காவல்துறையினர் இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பார்களா..?