சென்னை, கே.கே நகர், இராணி அண்ணா நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ், வ/23, த/பெ.பாஸ்கரன் என்பவர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 01.06.2025 அன்று மதியம் பிரகாஷின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர்கள் எழில், ராம், குமார், மணி ஆகியோர் பிரகாஷின் இருசக்கர வாகனத்தை பிறகு தருவதாக கூறி வாங்கிச் சென்றுள்ளனர்.



பின்னர் வெகு நேரம் ஆகியும், இருசக்கர வாகனத்தை தராத காரணத்தினால் பிரகாஷ் 01.06.2025 அன்று இரவு சிவலிங்கபுரம் 82வது தெருவில் நின்று கொண்டிருந்த எழில், ராம், குமார், மணி ஆகியோரிடம் சென்று அவரது இருசக்கர வாகனத்தை கேட்டபோது, மேற்படி நால்வரும் சேர்ந்து பிரகாஷை தகாத வார்த்தைகள் பேசி, கட்டை மற்றும் பிளாஸ்டிக் பைப்பால் தாக்கிவிட்டு, பிரகாஷின் இருசக்கர வாகனத்தை கல்லால் தாக்கி, சேதப்படுத்திவிட்டு, பிரகாஷின் வீட்டிற்கு வந்து, இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, பிரகாஷின் வீட்டில் வைத்திருந்த 2 தலைகவசத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து பிரகாஷ், R-7 கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். R-7 கே.கே நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 1.எழிலரசன், வ/18, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, கே.கே நகர், சென்னை, 2.ராம், வ/19, த/பெ.மூர்த்தி, கே.கே நகர், சென்னை, 3.குமார், வ/19, த/பெ.கண்ணன், புளியந்தோப்பு, சென்னை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி எழிலரசன் மீது ஏற்கனவே 1 கொலைமுயற்சி உட்பட 3 குற்ற வழக்குகளும், எதிரி ராம் மீது 3 அடிதடி வழக்குகளும், எதிரி குமார் மீது 1 கொலைமுயற்சி, கொள்ளை உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரியை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.
