சென்னை, வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வரும் லஷ்மிகுமார், வ/59, த/பெ.சீனிவாசன் என்பவர் ஆதம்பாக்கம், மேடவாக்கம் மெயின்ரோட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். லஷ்மிகுமார் கடந்த 09.07.2025 அன்று இரவு, மேற்படி பல்பொருள் அங்காடியை பூட்டிவிட்டு, மறுநாள் (10.07.2025) காலை பார்த்தபோது, கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ.1,41,897/-ஐ யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து லஷ்மிகுமார், S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட எதிரி ராஜி மாரிமுத்தினேஷ், வ/27, ராதாபுரம், திருநெல்வேலி மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பணம் ரூ.1,31,840/- மீட்கப்பட்டு, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கட்டிங் மெஷின் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ராஜி மாரிமுத்தினேஷ் மீது ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் ஒரு போக்சோ வழக்கு உள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி ராஜி மாரிமுத்தினேஷ், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
