தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில், படித்து வரும் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் போதை புழக்கம் இருப்பதாக தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு புகார்கள் வந்தன.
இந்த நிலையில், தாம்பரம் காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் கடந்த 26 ஆம் தேதி அன்று பொத்தேரி, மறைமலைநகர் மற்றும் காட்டாங்குளத்தூர் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை ஒரு உதவி காவல் ஆணையாளர், 5 காவல் ஆய்வாளர்கள், 20 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 60 காவலர்கள் அடங்கிய பல்வேறு குழுக்கள் மூலம் நடத்தப்பட்டது. மொத்தமாக 12 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. அவற்றில் 5 அடுக்குமாடி குடியிருப்புகள், 2 தனி வீடுகள், 1 பான் கடை, 2 பெட்டி கடைகள், 1 காபி ஷாப் மற்றும் 1 சாலையோரக் கடையில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 166 கிராம் கஞ்சா, 5,250 கஞ்சா சாக்லெட்டுகள், ஹுக்கா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 7 கல்லூரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் 2 ஆம் ஆண்டு B.Tech, CSC மற்றும் 4-ஆம் ஆண்டு B.Tech, CSC படித்து வருகின்றனர். இது குறித்து மறைமலைநகர் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டம், புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 11 நபர்கள் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இது குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ”பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதியில் போதைப்பொருள் பயன்பாடு உள்ளது என வந்த தகவலின் அடிப்படையில் மட்டுமே சோதனை நடத்தப்பட்டது. நாங்கள் சில கல்வி நிறுவனங்களை மட்டும் குறி வைத்து இந்த சோதனையை நடத்தவில்லை.
சென்ற ஆண்டும் இந்த பகுதியில் சோதனை நடத்தப்பட்டு போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதே போல இந்த ஆண்டும் சோதனை நடத்தப்பட்டது. கல்லூரி மாணவர்கள் ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்ற பெட்டிக் கடையில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு தங்கி படிக்கும் வெளிமாநில மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஊருக்குச் சென்று திரும்பும் பொழுது கஞ்சாவை அதிக அளவில் வாங்கி வந்து இங்கு விற்பனை செய்வதால் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில், தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை மொத்தம் 318 போதை பொருள் தடுப்பு சட்டம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,516 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 341 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 1,208 கிலோ போதைப் பொருட்கள் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கப்பட்டுள்ளன. தொடர் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 11 பேரை கண்டறிந்து, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதை பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் போதைப்பொருள் இல்லா சமூகத்தை உருவாக்குவதற்கு தாம்பரம் மாநகர காவல்துறையின் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும், இதே போல போதைப் பொருட்களுக்கு எதிராக சோதனைகள் தொடரும்” என அவர் தெரிவித்தார்.
