சென்னை பெருநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெளி மாநில, ஒரு நம்பர் மற்றும் மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், தனிப்படை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் (01.09.2025) மதியம், விருகம்பாக்கம், இந்திரா நகர் 2வது குறுக்கு தெருவில் கண்காணித்து, அங்கு, வெளி மாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை துண்டு காகிதத்தில் எழுதி கொடுத்து, செல்போன் மூலம் முடிவுகளை பார்த்து சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த 1.பிரபாகரன், வ/48, இந்திராநகர் 2வது குறுக்கு தெரு, விருகம்பாக்கம், 2.அருண்குமார், வ/37, இந்திரா நகர் 1வது குறுக்கு தெரு, விருகம்பாக்கம், 3.யாக்கோப், வ/41, கம்பர் தெரு, விருகம்பாக்கம் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள், பணம் ரூ.4,760/- மற்றும் 7 பில் புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் விசாரணைக்குப் பின்னர் (01.09.2025) நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
