சென்னை பெருநகர காவல், J-8 நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அக்கரை சோதனை சாவடியில் காவல்குழுவினர் (02.09.2025) வாகனதணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி, காரில் வந்த 5 நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின்பேரில், அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது, காரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக 3 கத்திகள் மற்றும், அவர்கள் வந்த காரின் பதிவெண்ணை மாற்றி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் மேற்படி 5 நபர்களையும் அவர்கள் வந்த காருடன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
J-8 நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணையில், மேற்படி பிடிபட்ட 5 நபர்களும் சேர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்து செல்லும் பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டு, காரின் பதிவெண்னை மாற்றி கத்திகளுடன் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், J-8 நீலாங்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற எதிரிகள் 1.உதயநிதி (எ) சூர்யா, வ/29, திடீர்நகர், மதுரை மாவட்டம், 2.விக்னேஷ்வரன், வ/28, நாமக்கல் மாவட்டம், 3.ஆரிப்லால், வ/32, தியாகதுருவம், கள்ளக்குறிச்சி மாவட்டம், 4.அருண், வ/30, இதயமேலூர், சிவகங்கை மாவட்டம், 5.ராம்குமார், வ/28, பூவந்தி, சிவகங்கை மாவட்டம் ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய 1 கார், 3 கத்திகள் மற்றும் 2 போலி நம்பர் பிளேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி உதயநிதி (எ) சூர்யா மீது ஏற்கனவே 1 கொலை, அடிதடி, திருட்டு உட்பட 5 குற்ற வழக்குகளும், எதிரி விக்னேஷ்வரன் மீது 1 கொலை, வழிபறி, அடிதடி உட்பட 6 குற்ற வழக்குகளும், எதிரி ஆரிப்லால் மீது 1 கொலை உட்பட 2 குற்ற வழக்குகளும், எதிரி அருண் மீது 1 கொலைமுயற்சி உட்பட 2 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 5 எதிரிகளும் விசாரணைக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
