தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், ஹரிதவனம், பாச்சுப்பள்ளி பகுதியில் வசித்து வரும் திருமதி.விஜயசாமுண்டீஸ்வரி, வ/59, என்பவருக்கு சொந்தமான வேளச்சேரி கிராமம், விஜயநகர், பிளாட் எண்.2ல் அடங்கிய 4,230 சதுர அடி கொண்ட சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள காலிமனையை சிலர் போலியான ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து அபகரித்துள்ளனர்.
எதிரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி மேற்படி விஜயசாமுண்டீஸ்வரி 02.06.2025 அன்று காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் திரு.வரதராஜன் அவர்கள் தலைமையில் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் அவர்களால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



மேற்கண்ட புகாரில் உரிய துரித நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.ராதிகா, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் படி தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் உரிய ஆவணங்கள் மற்றும் பணபரிவர்த்தனை விபரங்கள் மூலம் வசிக்கும் நபரின் விபரங்களை பெற்று எதிரிகளை தேடி வந்த நிலையில், சொத்தின் உரிமையாளரான விஜயசாமுண்டீஸ்வரி பெயரில் ஆள்மாறாட்டம் செய்த முகப்பேர் மேற்கு, செந்தமிழ்நகரைச் சேர்ந்த 1.யசோதா பெ/வ 59, 2.பழனி ஆ/வ 43, 3.வனிதா பெ/வ 40, மற்றும் மேற்படி நபர்களை ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுத்தியும், போலி ஆவணங்களை தயார் செய்யவும் மூளையாக இருந்து செயல்பட்ட முகப்பேர் மேற்கு, வி.ஜி.பி நகரைச் சேர்ந்த V-7 நொளம்பூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி 4.மேகநாதன் (எ) குட்டி ஆ/வ 49 மற்றும் மேற்படி சொத்தை விற்பதில் உறுதுணையாக இருந்து ஆதாயம் அடைந்த வேளச்சேரி ராம்நகரைச் சேர்ந்த 5.அருணாச்சலம், ஆ/வ42 ஆகிய 5 நபர்களை கடந்த 16.09.2025 அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். அவர்களிடமிருந்து ஆள்மாறட்டத்திற்கு பயன்படுத்திய போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை மத்திய குற்றப்பிரிவு, நில மோசடி புலனாய்வு பிரிவு தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தக்க புலன் வைத்து நிலபுரோக்கர்கள் 1.பத்மநாபன், வ/43, சூளைமேடு, சென்னை 2.ஐயப்பன், வ/46, மேற்கு தாம்பரம், சென்னை மற்றும் தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வரும் 3.சுகுமார், வ/38, வேளச்சேரி, சென்னை ஆகிய மூவரும் முறையே சூளைமேடு, மேற்கு தாம்பரம் மற்றும் வேளச்சேரியில் வைத்து (31.10.2025) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு 3 எதிரிகளும் CCB & CBCID எழும்பூர் நீதிமன்றத்தில் (31.10.2025) ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
எதிரிகள் கூட்டாக சேர்ந்து அபகரித்த சொத்தானது சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள 4,230 சதுர அடி கொண்ட இடமாகும்.
