பேராவூரணி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியிடையே ஏற்ப்பட்ட தகராறில் தம்பி தாக்கியதில் அண்ணன் உயிரிழந்தார்.
திருச்சிற்றம்பலம் காவல் சரகம் பொக்கன்விடுதி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ஜவகர் (45) வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகளும் 4 குழந்தைகளும் உள்ளனர். இவரது தம்பி பிரசாந்த் (40). வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார். பிரசாந்துக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அண்ணன் தம்பியிடையே குடும்ப சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அருகருகே தனிதனி வீடுகளில் வசித்து வரும் நிலையில் சொத்து தொடர்பாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதில் தம்பி பிரசாந்த் இரும்பு பைப்பால் அண்ணன் ஜவகரை தலையின் பின்பக்கம் தாக்கியதில் பலத்த காயமைடைந்து ரத்த வெள்ளத்தில் ஜவஹர் துடித்தார். அருகில் உள்ளவர்கள் ஆபத்தான நிலையில் ஜவகரை மீட்டு சிகிச்சைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி ஜவஹர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்குப்பதிவு செய்து பிரசாத்தை தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தம்பி, அண்ணனை கொலை செய்த சம்பவம் திருச்சிற்றம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
