தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியின் முக்கிய தேவைகளில் ஒன்று — சுடுகாடு மற்றும் அதற்குச் செல்லும் பாதை. ஆனால் இன்று அந்தப் பாதையின் நிலைமை மிகவும் சீரழிந்ததாக உள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்படும் விதமாக, சேறும், சதையும், குப்பையும் குவிந்து, சுடுகாட்டின் உள்ளேயும் பாதையிலும் மக்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.


பராமரிப்பின்றி பல ஆண்டுகள் – பொதுமக்களின் குற்றச்சாட்டு
பேராவூரணி பேரூராட்சியில் பல பகுதிகளில் உள்ள சுடுகாடுகள் பராமரிப்பு செய்யப்படுகிறதென மக்கள் கூறினாலும்,
எம்ஜிஆர் நகர் சுடுகாடு மட்டும் எந்த பராமரிப்பும் பெறாமல் அசுத்தமாகவும் அபாயகரமாகவும் உள்ளதாக அவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முள் புதர்கள், குப்பை, மழைநீர் நின்று புழுதி ஆகியவை நிரம்பி, மரணச்சடங்குகளுக்குப் கூட மக்கள் போக முடியாத சூழலை உருவாக்கியுள்ளது. இது போதாமல், பேராவூரணி பேரூராட்சி குப்பை வண்டி கூட இங்கு தவறாக குப்பை கொட்டுகின்றது என்ற புகாரும் எழுந்துள்ளது.
இதைப் பற்றி மக்கள் பலமுறை தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அவர்களின் வேதனை.


கிராம மக்கள் கேள்வி — “ஐந்தாவது வார்டு கவுன்சிலரும், பேரூராட்சி பெருந்தலைவரும் நடவடிக்கை எடுப்பார்களா?”
இந்தப் பகுதி பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் திருமதி சாந்தி சேகர் மற்றும் ஐந்தாவது வார்டு கவுன்சிலரின் அதிகாரப்பரப்பு. தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், “இப்போதாவது சுடுகாடு சீரமைக்கப்படுமா?” என்ற கேள்வி மக்களிடையே தினமும் கேட்கப்படுகிறது.
இங்கு மட்டும் இல்லாமல் ஆதனூர், கருப்பமனை, நவக்கொல்லைக்காடு என இன்றும் சாலை இல்லாத, சுடுகாடு இல்லாத பகுதிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இன்று 2025-ல் கூட இந்த பகுதிகள் பயணிக்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளன.
- சாலைகள் பெரும்பாலும் பயணிக்க முடியாத அளவுக்கு குன்டும் குழியுமாக உள்ளது.
- சில இடங்களில் சாலை என்றே ஒன்று இல்லை.
- மருத்துவ அவசரகால நிலையிலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை
- என்பதே மக்கள் வேதனை.
சுடுகாட்டை கானோம் ?
மக்களின் வார்த்தை :“நவக்கொல்லைக்காட்டில் ஒரு சரியான சுடுகாட்டு வளாகம் அல்லது கட்டிடம் கூட இல்லை என்பது மாநிலத்திற்கே அவமானம்” புதிதாக கட்டிடம் கட்டுவதாக இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு சென்றவர்கள் மீண்டும் கண்ணில் தென்படவே இல்லை.
இது தொடர்பாக பார்காத அதிகாரிகளும் இல்லை கொடுக்காத மனுக்களும் இல்லை. சமீபத்தில் கூட இது போன்ற பிரச்சனைகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வந்த பதில் எண்:155/2025 அரசு கடிதத்தில் கூறியிருப்பதாவது
குடிமக்கள் முறையீடு தொடர்பாக சுகாதாரம், ஊராட்சி மற்றும் பேரூராட்சி துறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சுத்தமான சூழலில் வாழ வழிமுறைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் கூறுவதாவது:
“காகிதத்தில் எல்லாம் எழுதிக்கிடக்கும்… நிலத்தில் மாற்றம் எது? ஆய்வு எல்லாம் ஆய்வாகத்தான் இருக்கிறது, செயல் எப்போது?”
அரசியல் மாற்றங்கள் இருந்தும் நிலைமையே மாறவில்லை.இந்தத் தொகுதி கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளின் கையில் இருந்தது. முன்னாள் காலங்களில் அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இந்தப் பகுதியை நிர்வகித்தன. கடந்த ஐந்து ஆண்டுகளாக இது தற்போதைய திமுக எம்.எல்.ஏ. திரு. அசோகுமார் அவர்களால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
ஆனால் மக்களின் கூற்றுப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கே உதவிகள் சென்றதாகவும், சில சமூகங்கள் பூரணமாக புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மேலும்,
- பல பகுதிகளில் சாலை இல்லை, இருந்த இடங்களில் ஆபத்தான நிலை,
- கழிவுகள் மேலாண்மைக்கான திட்டங்கள் செயல்படவில்லை,
- எந்த அடிப்படை வசதிகளும் மேம்படவில்லை,
- மக்களிடமிருந்து எழுந்த புகார்கள் கவனிக்கப்படவில்லை —
- என்று மக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
- “ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ அனைவருக்கும்தான்; ஆனால் இங்கு பாகுபாடே அதிகம்” என சிலர் கூறுகின்றனர்.
தேர்தல் நெருங்குகிறது — இப்போது மாற்றம் வருமா?
தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், “குறைந்தது இப்போதாவது சாலை, சுடுகாடு, குப்பை மேலாண்மை போன்ற அடிப்படைகள் சீரமைக்கப்படுமா?”என்ற நம்பிக்கை சிலருக்கு உள்ளது. அதே நேரத்தில், “ஐந்து ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்தவர், தேர்தல் முன்பாக திடீரென செயல் ஆற்றுவாரா?” என்று சந்தேகத்துடன் காத்திருக்கும் மக்களும் உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்பு
- சுடுகாடு உடனடியாக சுத்தம் செய்து பராமரிப்பு செய்யப்பட வேண்டும்
- சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையில் சாலைவடிவமைப்பு செய்யப்பட வேண்டும்
- குப்பை கொட்டும் தவறான நடைமுறைக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்
- சமூக அடிப்படையிலான பாகுபாடின்றி அனைவருக்கும் சமமாக உதவிகள் கிடைக்க வேண்டும்
- இவற்றை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தற்போதைய முக்கிய கேள்வி.
மக்கள் கூறுவது ஒன்றே —
“நாங்கள் யாரையும் எதிர்த்து அல்ல, நம் பகுதி வளரவேண்டும் என்பதற்காகத்தான் பேசுகிறோம்.” தேர்தல் நெருங்கும் நேரத்தில், மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுமா? என்று அனைவரும் கவனத்துடன் காத்திருக்கின்றனர்.
நல்லது நடக்கட்டும்… மக்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகட்டும்.
