புதுக்கோட்டை மாவட்டத்தில் சலூன் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஒருவரின் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள கலீப் நகர் 1ஆம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் புதுக்கோட்டையில் சலூன் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரது மனைவியும் மருத்துவமனையில் தங்கி இருந்தார்.
இந்த சூழ்நிலையில், அவர்களது பிள்ளைகள் அருகிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். வீடு காலியாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், இன்று அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் வீட்டின் கதவையும் பீரோவையும் உடைத்து, அதில் இருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலை நேரத்தில் இந்த சம்பவத்தை கவனித்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டு உரிமையாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் வந்த சரவணன் குடும்பத்தினர், வீட்டில் திருட்டு நடந்ததை உறுதிப்படுத்தினர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்.
முதல் கட்ட விசாரணையில், வீட்டில் இருந்து 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும், வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராட் மற்றும் உடைந்த கேட் பகுதிகளை மர்மநபர்கள் வீட்டின் அடுப்பறையில் விட்டுச் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை அடையாளம் காண தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
