திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்ட கால விசாரணைக்கு பிறகு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பனாம்பட்டி பகுதியைச் சேர்ந்த முரளி (32) என்பவர், தனது நண்பர்களான பூபதி உள்ளிட்டவர்களுடன் கடந்த 13.10.2020 அன்று முள்ளிப்பாடியில் நடைபெற்று கொண்டிருந்த கபடி போட்டியில் பங்கேற்கச் சென்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபு (22) என்பவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரபு, முரளி மற்றும் அவரது நண்பர்களிடம் “எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டு தகராறு செய்ததாகவும், பின்னர் வார்த்தை தகராறு தீவிரமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது பிரபு கத்தியால் முரளியை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடுமையாக காயமடைந்த முரளி உடனடியாக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 19.10.2020 அன்று முரளி உயிரிழந்தார்.
இதுகுறித்து பூபதி அளித்த புகாரின் பேரில் தொட்டியம் காவல் நிலையத்தில் IPC 294(b), 307, 506(ii) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் 302 (கொலை) பிரிவாக மாற்றப்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளி பிரபுவை கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பினர்.
இந்த வழக்கு திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்து வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் (27.03.2026) அன்று தீர்ப்பளித்ததில், குற்றவாளி பிரபுவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹11,000 அபராதம் விதித்தார். அபராதம் செலுத்தத் தவறினால் கூடுதல் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்த காவல் துறையினரின் முயற்சியும் பாராட்டப்பட்டது. தொட்டியம் காவல் நிலைய நீதிமன்ற தலைமைக் காவலர் வளர்மதி அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். 👏 இந்த தீர்ப்பு, பழைய கொலை வழக்குகளிலும் சட்டம் தனது பணியைச் செய்கிறது என்பதையும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. பொதுமக்கள் மத்தியில் இது சட்டத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.
