சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி வேப்பேரி காவல் ஆணையரகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் நடைபெற்றது.
சென்னை பெருநகர காவல்துறையில் பணியாற்றி வரும் ஆயுதப்படை துணை ஆணையாளர்–2 திரு. எஸ். அன்வர் பாஷா, ஊர் காவல் படை கூடுதல் துணை ஆணையாளர் திரு. எஸ். அமுல்தாஸ், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் திரு. சி. சங்கு ஆகியோர் உட்பட, 01 காவல் ஆய்வாளர், 08 காவல் உதவி ஆய்வாளர்கள், 10 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 01 தலைமை காவலர் என மொத்தம் 23 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 31.03.2026 அன்று பணி ஓய்வு பெறுகின்றனர்.
இந்நிலையில், கூடுதல் காவல் ஆணையாளர் (தலைமையிடம்) திரு. கே. ஜோஷி நிர்மல் குமார் அவர்கள் (இ.கா.ப.) தலைமையில், (30.03.2026) வேப்பேரியில் நடைபெற்ற பணி நிறைவு விழாவில், ஓய்வு பெறும் காவல் துறையினரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 22 ஆண்டுகள் முதல் 41 ஆண்டுகள் வரை சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய இவர்களின் சேவையை பாராட்டி, தமிழக காவல்துறைக்கும் சென்னை பெருநகர காவல்துறைக்கும் பெருமை சேர்த்ததை நினைவுகூர்ந்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், ஓய்வு பெறும் காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் கூடுதல் ஆணையாளர் நன்றி தெரிவித்தார். காவல்துறைக்கு குடும்பத்தினர் அளித்த ஒத்துழைப்பை பாராட்டிய அவர், பணி ஓய்வுக்கு பின்னரும் உடல்நலத்தை பேணி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திரு. எஸ். மகேஸ்வரன் (இ.கா.ப.), காவல் அதிகாரிகள், ஓய்வு பெறும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
