சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர காவல் துறையில் தோழி திட்டம் செயல்பட்டுவருகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 03.02.2021 அன்று காலை காவல் ஆணையாளர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உதவிடும் தோழி திட்டம் மகளிர் காவல் ஆளினர்களுக்கான ஒரு நாள் புத்துணர்வு பயிற்சி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் தோழி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி.வள்ளியம்மை, மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி. புனிதா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி.வனிதா, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக்காவலர் திருமதி.வளர்மதி ஆகியோருக்கு காவல் ஆணையாளர் தோழி விருது வழங்கி கௌரவித்தார்.