சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னை, சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன், என்பவர் 19.02.2021 தனது மனைவி கௌசல்யாவின் அப்பாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தானும் ஆடிட்டர் குருஜியும் ரூ. 30 லட்சம் பணத்திற்காக கடத்தப்பட்டுள்ளதாகவும், பணத்தை தயார் செய்யும் படியும், இல்லை என்றால் தங்களை கடத்தல்காரர்கள் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார். உடனே கௌசல்யா இந்த தகவலை விருகம்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்ததின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர்மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் தி.நகர் துணை ஆணையாளர் மேற்பார்வையில் அசோக்நகர் சரக உதவி ஆணையாளர் பிராங்க் டி ரூபன் அவர்கள் தலைமையில் R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெ.நந்தினி, R-11 ராயலா நகர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.சுப்பிரமணி, உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை குழு அமைக்கப்பட்டது .
தனிப்படை காவல் குழுவினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்தும், தி.நகர் சைபர் குற்றப்பிரிவு காவல் குழுவினர் உதவியுடன் மேற்படி கடத்தல் வழக்கில் தொடர்புடைய திலீப், சதீஷ்குமார், சுனில்குமார், கௌதம், விக்கி (எ) விக்னேஷ், சீனிவாசன் ஆகிய 6 நபர்களை கைது செய்தனர். நியூட்டன் மற்றும் குருஜி ஆகிய இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடத்தல்காரர்களிடமிருந்து 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் குற்றவாளிகள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.