சென்னை காவல்ஆணையர் நேரில் பாராட்டு
குரோம்பேட்டை பகுதியில் இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு கடையின் பூட்டை உடைத்து திருடிய பொய்யாமொழி என்பவரை கைது செய்த S13 குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் என்பவரை , சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் (த.கா.35340) என்பவர் இரவு ரோந்து பணியிலிருந்தபோது, 05.7.2021 அன்று அதிகாலை தாம்பரம் சானிடோரியம் இரயில் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்து, அவரது பையை சோதனை செய்தபோது, அதில் சிறிய அளவிலான இரும்பு கடப்பாரை மற்றும் எலக்டிரானிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் பிடிபட்ட நபரை S13 குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் பொய்யாமொழி, (வ/57) மதுரை என்பதும், நள்ளிரவு, தாம்பரம், சானிடோரியம், GST சாலையிலுள்ள கடையின் பூட்டை உடைத்து, லேப்டாப் உள்ளிட்ட எலக்டிரானிக் பொருட்கள் திருடியது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் குழுவினர் பொய்யாமொழி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 லேப்டாப், 3 டேப்லட், 3 கைக்கடிகாரங்கள் மற்றும் 1 சிறிய கடப்பாரை ஆகியவை கைப்பற்றப்பட்டு, குற்ற எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த S13 குரோம்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் ரவிச்சந்திரன் (த.கா.35340) என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 07.07.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.