சென்னையை அடுத்த புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பல்லாவரம், சேலையூர், சிட்லபாக்கம், சங்கர் நகர் போன்ற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெண்களிடம் தொடர் வழிப்பறி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் உத்தரவின் பேரில் தென் சென்னை இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர்(பொறுப்பு) ராமர் மேற்பார்வையில் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் பிராங் டி ரூபன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துசாமி, மணிமாறன், ரபீக் உசேன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்தபோது மடிப்பாக்கம் மூவரசம்பட்டு சந்திப்பில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த லியோனோர்டு ஜேம்ஸ்(வயது 28), மறைமலைநகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(23), ஊரப்பாக்கம் கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிவசங்கர்(28) என தெரியவந்தது.
இவர்கள் கடந்த 4 மாதங்களாக மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லபாக்கம், சேலையூர், பல்லாவரம், சங்கர் நகர் பகுதிகளில் சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்டதை ஒப்புக் கொண்டனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.