பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தாண்டு ஒரே தொடரில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய இந்த பாரா ஒலிம்பிக் தொடர், வரும் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெற்றது.
இந்தாண்டு பாரா ஒலிம்பிக்கில் உலகில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவின் சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 வகை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். பாரா ஒலிம்பிக் வரலாற்றில், இந்திய அணியில் இவ்வளவு அதிக வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளது இதுவே முதல் முறை.
அதிகப்படியான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றது மட்டுமின்றி அதிகப்படியிலான பதக்கங்களையும் வென்று குவித்துள்ளது. இந்திய அணி 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களுடன் இருந்து வந்தது. துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அவனி, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
ஈட்டி எறிதலில் சுமித் அண்டில், தேவேந்திர ஜாஜிஹாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோரும் வட்டு எறிதலில் யோகேஸ்த் காதுனியாவும் பதக்கம் வென்றனர். இதே போல மாரியப்பன் தங்கவேலு, பாவ்னியா, நிஷாத் குமார் உள்ளிட்டோரும் பதக்கம் வென்றிருந்தனர். நிஷாத் குமார் வென்ற வெள்ளிப்பதக்கம் துரதிஷ்டசவசமாக திரும்ப பெறப்பட்டது.
ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் பிரவீன் குமாருக்கும் பிரிட்டன் வீரர் ஜானதனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பிரவீன் குமார் வென்றார். 2.07 என்ற உயரத்தை தாண்டி ஆசிய அளவில் சாதனை புரிந்துள்ளார்.
இதே போல துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை அவனி லெகாரா ஒலிம்பிக்கில் தனது 2வது பதக்கத்தை வென்றார். மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவனி லெகாரா 445.9 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார்.
இதன் மூலம் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளிப்பதக்கம், 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பட்டியலில் 36வது இடத்தை பிடித்துள்ளது. இந்த எண்ணிக்கை மூலம் இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள 16 பாரா ஒலிம்பிக் சீசன்களில் இந்தியா வென்றுள்ள மொத்த மெடல் எண்ணிக்கை 12 ஆகும். ஆனால் இந்தாண்டு பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி தற்போது வரை வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதற்கு முன் 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் 4 மெடல் பெற்றதே அதிக எண்ணிக்கையாக இருந்தது. இம்முறை நமது வீரர்கள், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.