கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடந்த 07.10.2021 அன்று கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின் பேரில், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சரக உதவி ஆணையாளர் தலைமையில் பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பேரில் 08.10.2021 அன்று மதியம் 12.30 மணியளவில் கிண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னமலை பகுதியில் உள்ள சென்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கிண்டி சரக உதவி ஆணையாளர் திரு.புகழ்வேந்தன், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்கள் தங்களது எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும், பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுதும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் போலீசாரின் அறிவுரைகளை கேட்டு நடப்பதாக தெரிவித்தனர்.