கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றும் எம்.எஸ்.முத்துசாமியை மக்களின் தோழராக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மாங்குடி மீனாட்சிபுரம் ஆகும். ராஜபாளையம் மற்றும் மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர் 1992 ஆம் ஆண்டு கூட்டுறவு துறையில் ஆய்வாளராக பணிபுரிந்தார். அதன்பிறகு குரூப் 1 தேர்வு எழுதி 1998 ஆம் ஆண்டில் துணை சூப்பிரண்டாக போலீஸ் துறையில் பணிக்குச் சேர்ந்தார். இவர் தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்தார். அதன்பிறகு 2006 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் ஆனார். பின்னர் அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பி ஆகவும், சென்னை தியாகராயநகர், புனித தோமையார் மலை, அண்ணாநகரில் துணை ஆணையராகவும் பணிபுரிந்தார்.
மேலும் முதல்அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக 4 ஆண்டுகளும், போலீஸ் சூப்பிரண்டாக 4 ஆண்டுகளாகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் சென்னை அண்ணாநகரில் துணை கமிஷனராக பணியாற்றி, பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக பொறுப்பேற்றார். அதன்பின்னர் கோவை சரக டி.ஐ.ஜியாக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரிந்த இடங்களில் தான் டி.ஐ.ஜி. என்பதை மனதில் நிறுத்திக் கொள்ளாமல் பொதுமக்களின் உற்ற தோழனாகவும், பொதுமக்களின் குரலுக்கு மதிப்பு அளித்து அந்த குறைகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். மேலும் சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவதிலும் தயக்கம் காட்ட மாட்டார். இவரது எண்ணற்ற செயல்பாடுகள் பொதுமக்களை வியப்படைய வைத்திருக்கிறது.
காவல்துறையில் கடமையில் கண்ணியத்துடன், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரையும் பாராட்டி அதில் மகிழ்ச்சி அடைவார். அதேபோல் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க கூடிய போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார். தற்போது கோவை சரகத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் போலீசாரின் மனக்குமுறல்களை கேட்டறிந்து அவர்கள் பணியில் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார் எனவும், போலீசாருக்கு தந்தையாகவும், சகோதரனாகவும் இருந்து எங்களை வழிநடத்தி செல்கிறார் என கோவை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பெருமிதம் கொள்கின்றனர்.
(உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும்) அதாவது கோட்டை சுவர்கள் எளிதில் ஏற முடியாத உயரமும், வீரர்கள் தங்கி நின்று காவல் புரிய வசதியுள்ள அகலமும், துளைத்து விட முடியாத உறுதியும், பகைவர்கள் அறிந்து கொள்ள முடியாத எந்திர தந்திர இரகசியங்களும் ஆகிய இந்த நான்கும் பொருந்திய சுவர்கள் உள்ளதாக இருப்பதே கோட்டையென்று, அதைப் பற்றிய நூல்கள் சொல்லும்.
இந்த வள்ளுவர் வாக்கிற்கிணங்க கோவை மாவட்ட மக்களின் அரணாக விளங்கி, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்று மக்களின் தோழனாக வலம் வரும் டி.ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமியை நமது நீதியின் நுண்ணறிவு மாத இதழின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.