இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும் பொக்கிஷம் மட்டுமல்ல கருத்துப் புதையல் எனவே திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் பெருமைப்படுத்தும் வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சீரிய முயற்சியால்
1976 – ம் ஆண்டு சென்னையில் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. இந்நினைவிடத்தின் முக்கிய அம்சமாக திருவாரூர் தேரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 39 மீட்டர் (128 அடி) உயரத் தேர் விளங்குகிறது. இதனுள் ஆளுயர வள்ளுவர் சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. இத்தேரைச் சுற்றிலும் பளிங்குக் கற்களில் குறட்பாக்கள் பதிப்பிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.
இந்நினைவிடத்தின் பிரதான வளாகத்தில் 1,330 குறட்பாக்களும் கல்வெட்டுகளாகச் செதுக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.!!!
ஈராயிரம் ஆண்டுகளாக தமிழனின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் நூல் திருக்குறள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். அந்த வகையில் அமரர் அப்துல் கலாம் ஐயா முதல் இன்றைய நமது பாரத பிரதமர் மேதகு நரேந்திர மோடி வரை திருக்குறளை அனைவரும் மேற்கோள்காட்டி பேசி வருகின்றனர் அண்மையில் கூட நமது பாரத பிரதமர் இந்திய ராணுவ படைகளிடம் தாமாற்றிய உரை உட்படப் பல நிகழ்வுகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய அரசின் அறிக்கையான “2020 இந்தியப் பொருளாதார மதிப்பாய்வு” தனது அறிக்கையில் குறளையும் அர்த்த சாஸ்திரத்தையும் அதிகமாகச் சுட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே எந்த சூழ்நிலையானாலும் சரி அதைச் சமாளிக்க என்ன அறிவுரை வேண்டுமானாலும் ஒருவன் திருக்குறளில் இருந்து பெற்றுத் தெளிவடைய முடியும். ஆன்மீகமாகட்டும், லௌகீகமாகட்டும், அறமாகட்டும், தொழிலாகட்டும், அமைதியாகட்டும், மகிழ்ச்சியாகட்டும் எந்த சூழ்நிலை என்றாலும் சிறிதும் குழப்பம் இன்றி வழி காட்டும் அறிவுப் பொக்கிஷம் திருக்குறள் தான்.
நீங்கள் வெற்றியடைய விரும்புகிறீர்களா? உங்களுக்குப் பல நூல்கள் படிக்க நேரமும் பொறுமையும் இல்லையா? உங்களுக்கு நிச்சயம் திருக்குறள் உதவும்.
அந்த வகையில் வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு என்கிற தலைப்பில் நான் எழுதும் தன்னம்பிக்கை தொடரில் உங்களுக்கு வாழ்வில் நெறிகாட்டும் வழிகாட்டும் ஏழு திருக்குறள்களை நான் மேற்கோள் காட்டுகிறேன்.
அந்த ஏழு திருக்குறள் பின்வருமாறு
1) எண்ணத்தில் உறுதி:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின். (666)
நினைத்ததை நினைத்தபடி அடைபவர் யார் தெரியுமா? தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான். எண்ணத்தில் உறுதி இல்லா விட்டால் அது செயலில் முடியாது. செயலில் முடியாத எண்ணங்கள் விதைக்காத விதைகள். மாறாத உறுதியான எண்ணம் தான் எல்லா வெற்றிக்கும் ஆரம்ப விதி
2) நேர்மறை எண்ணம் :
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (596)
எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும். பாதகமான சூழ்நிலைகளிலும் உயர்வான எண்ணங்களை எண்ணுவதை விட்டு விடக் கூடாது. எண்ணமே வாழ்க்கை என்பது அனுபவ உண்மை. சாதகமான சூழ்நிலைகளில் பாசிடிவ் ஆகவும், உயர்வான எண்ணங்களையும் நினைப்பது பெரிய விஷயமல்ல. பாதகமான சூழ்நிலைகளிலும் அதே எண்ணங்களோடு இருப்பவன் தான் வெற்றியை தனதாக்கிக் கொள்கிறான்.
3) விடாமுயற்சி
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல். (472)
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்கு அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது எதுவும் கிடையாது. வெற்றிக்கு ஆயிரம் வழிகள் இருக்கலாம். நம் இயல்புக்குப் பொருந்துகிற வழியைத் தேர்ந்தெடுத்து அதற்கு அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்து அந்த வழியில் விடா முயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.
4 ) இந்த நான்கைத் தவிருங்கள்..
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (605)
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்கிறார் திருவள்ளுவர். வெற்றியடைய வேண்டுபவர்கள் தோல்விக்கான வாகனத்தில் பயணம் செய்யலாமோ?
5 ) இந்த ஐந்தில் கவனம் தேவை..
பொருள்கருவி காலம் வினையிடனோடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். (675)
வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும்.
6) இவை இரண்டும் வழுக்குப்பாறைகள்..
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. (854)
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும், யாருக்கும் எளியவன். வெற்றியின் உயரத்திற்குச் செல்பவர்கள் இந்த இரண்டு வழுக்குப் பாறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இல்லா விட்டால் இது வரை சாதித்தது எல்லாம் வீணாய்ப் போகும்.
7) இந்தப் பேருண்மையை மறக்காதீர்கள்..
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை (659)
பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும். நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது.
இந்த ஏழு குறள்களில் முதல் நான்கு வெற்றிக்கு வழி சொல்கின்றன. அடுத்த இரண்டும் தோல்வி தரக் கூடியவற்றில் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றன. கடைசி குறள் வெற்றியின் நிறைவு நமக்கு என்றென்றைக்கும் நிலைக்க வேண்டுமானால் அது நியாயமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது.
காலமெனும் கல்வெட்டில் நிலைத்து இருக்கும் திருக்குறளை நாம் போற்றி புகழ்ந்து அதை வழி நடத்த வேண்டும்…. நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
எனவே திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசை யாகும் நாம் அனைவரும் அதற்காக ஒன்று சேர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்..
இறுதியாக நாமக்கல் கவிஞர் கூறியதுபோல
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்பதை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு தொடரும்..
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
செல்: 7598534851