உள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக அரசினால் கீழ்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2021-22 -ன் கீழ் விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி விரால் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளால் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைத்திடவும், மற்றும் விரால் மீன் வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினம் ஆக மொத்தம் ரூ.75,000/- ல் 40% மானியமாக ரூ.30,000/- வழங்கப்படும்.
மேலும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைக்கும் திட்டம் மற்றும் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பு மேற்கொண்டு அதற்கு ஆகும் உள்ளீட்டு செலவினம் ஆக மொத்தம் ரூ.62,500/- ல் 40% மானியமாக ரூ.25,000/ மானியமாக வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதேபோன்று, புதிய மீன்குளம் வெட்டவும், மற்றும் புதிய மீன்குஞ்சு உற்பத்தி குளம் வெட்டவும் 40% மானியம் அளித்திடும் திட்டம் ஏற்கனவே பத்திரிக்கை செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படாத காரணத்தினால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நிறைவு செய்திட ஏதுவாக மீன்வளர்ப்பு மற்றும் மீன்குஞ்சு வளர்ப்பு புதிய குளங்கள் அமைக்க விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி நான்குதிட்டத்தில் மானிய தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும், முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் எண்:873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 10.12.2021க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கிறார்.