இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்து உள்ளார்.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிர் இழந்த குடும்பத்தினர் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்க தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மாநகராட்சியிடம் உள்ள பதிவுகளின்படி 8 ஆயிரத்து 348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதுவரை 6 ஆயிரத்து 888 பேர் இணைய வழியில் பதிவு செய்துள்ளனர். அதில், அனைத்து ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 638 பேர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் https://chennai.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகள் காரணமாகவும், முழுமையான முகவரி இல்லாததாலும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதனாலும், கள ஆய்வின்போது வேறு முகவரிக்கு குடிபெயர்ந்து சென்றதாலும், மக்களாகவே முன்வந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இனங்களில் முழுமையாக மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும் அரசு வழங்கும் நிதி உதவியினை வழங்க இயலாத நிலை உள்ளது.
எனவே, கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் வாரிசுதாரர்கள் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 7-வது மாடியில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவிலோ அல்லது 1077 என்ற இலவச எண்ணையோ அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டோ கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், மயான சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வங்கி கணக்கு விவரம் போன்ற முழுமையான ஆவணங்களுடன் தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் நிதி உதவியினை பெறலாம்.
மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரை இழந்தோர் அல்லது இருவரையும் இழந்தோர் முறையே ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் பெற்றவர்களும் மேற்படி ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை பெற தகுதி உடையவர்கள் என்பதால் அவர்களோ அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு சென்னை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் (9385250785), மத்திய வருவாய் கோட்டாட்சியர் (9445461834), தெற்கு வருவாய் கோட்டாட்சியர் (9150042806) மற்றும் வருவாய் வட்டாட்சியர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.