நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து நாகப்பட்டினம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் சரக்கு வாகனத்தின் முன் மற்றும் பின் வந்த காரையும் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது சரக்கு வாகனத்தில் கோழி தீவனங்களுக்கு இடையில் 2 கிலோ எடை கொண்ட 250 கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்கள், சரக்கு வாகனங்களையும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தேனியை சேர்ந்த மணிவாசகம், அலெக்ஸ் பாண்டியன் முத்துப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீரங்கேஸ்வரன், திருவண்ணாமலை சேர்ந்த உமாபதி, சீர்காழியை சேர்ந்த சேகர் என்கிற சந்திரசேகர், நாகையை சேர்ந்த சிங்காரவேல் என 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் வைத்து 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட கஞ்சாவை பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் தனிப்படை போலீசாரை பாராட்டினார். மீனவர்கள் ஒத்துழைப்பு போலீசாருக்கு அதிக அளவில் இருப்பதால் இது போன்ற கடத்தலை தடுக்க முடிவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.