பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலைய சரகம் கரம்பயம். செம்பாளுர் எட்டுப்புலிக்காடு ஆலத்தூர் ஆலடிக்குமுளை வீரக்குறிச்சி பரங்கி வெட்டிக்காடு ஆகிய பகுதிகளில் கடந்த 4 மாத காலமாக தொடர்ந்து இரவு நேரங்களில் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களிடம் அரிவாளுடன் வீட்டினில் புகுந்து தாலி செயினை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து அறுத்து சென்றதும் இருசக்கர வாகனங்களை திருடி செல்வதும் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளை அடித்துச் செல்வதும் பட்டுக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரை பிடிக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஐ.பி.எஸ்., அவர்களின் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் மேற்பார்வையில் பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் காவலர்கள் அருண்குமார், இஸ்மாயில், தியாகராஜன் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
கடந்த இரண்டு வருடங்களாக பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்து முக்கிய சிசிடிவி கேமராக்கள் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியின் புகைப்படத்தை எடுத்து தேடிவந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழங் குற்றவாளி பெரியசாமி என்பவரின் மகன் பழனி என்கிற பழனிஆண்டி வயது 70 என்பவர் மேற்கண்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேற்படி நபர் செல்போன் பயன்படுத்தவில்லை என்பதை தெரிந்து கொண்ட தனிப்படையினர் மேற்படி நபர் இருக்கும் இடம் குறித்து கடந்த இரண்டு மாதமாக தேடிவந்த நிலையில் ஒரத்தநாடு குலங்களத்தில் 35 வருடங்களாக தங்கியிருப்பது தெரியவரவே குலமங்களம் கிராமத்தில் மேற்படி குற்றவாளியை மாறுவேடத்தில் தேடிச் சென்றபோது அங்கிருந்து தப்பித்து சென்றுவிட ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே மேற்படி நபரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. 35 வருடங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியில் வழிப்பறி செய்து 5 வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றதும் இவர் மீது திருச்சிற்றம்பலம் திருவோணம் காவல் நிலையத்திலும், ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களிலும் பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து தண்டனை பெற்றிருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும் நகைகளை கொள்ளையடித்து ஒரத்தநாடு தாலுக்கா குலமங்கலம் கிராமத்தில் உள்ள சில நபர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக அவர் சொன்ன தகவலின் பேரில் களவு போன நகைகள் கைப்பற்றப்பட்டது மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு பகுதிகளில் பல வருடங்களாக திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானது கடந்த ஏப்ரல் மாதம் ஒரே இரவில் நான்கு வீடுகளில் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் தாலி செயினை அறுத்து சென்றது அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு குற்றவாளியை பிடித்த தனிப்படையினர் உயரதிகாரிகள் பலர் பாராட்டினார்கள்.
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் குற்றசெயல்களை தடுக்கும் பொருட்டு திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் திருமதி.ஜெயா தனது காவலர்களுடன் 13-.6-.22 இரவு ஒட்டங்காடு கடைத்தெருவில் வாகன தணிக்கை செய்துகொண்டிருந்தார். அப்போது ஒட்டங்காடு அம்மன் ஹோட்டலில் சந்தேகப்படும் படியாக இரண்டு சக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் தனது முகவரியை முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். மேலும், அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதம்பை வடக்கு சங்கர் மகன் விஜய் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்கா முருகன் மகன் அஜித் என்றும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுக்கா ஆனந்தன் மகன் முத்துராமன் என்கின்ற ஜீவா என்றும் என்றும் கூறினார்கள்.
மேலும் இவர்களை விசாரிக்கும்போது தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திருச்சிற்றம்பலம், பாப்பாநாடு. ஒரத்தநாடு. சேதுபாவாசத்திரம். பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இரவில் வழிப்பறிக் கொள்ளை வாகன திருட்டு மற்றும் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து நகைகளை கொள்ளை அடிப்பது தனியாக தூங்கும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற குற்ற செயல்களை செய்து வந்ததை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து 12 பவுன் நகை மற்றும் சம்பவத்துக்கு பயன்படுத்திய வாகனத்தை கைப்பற்றப்பட்டது மேற்கண்ட எதிரிகளை பேராவூரணி குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது மேற்கண்ட களவாடிய சொத்தின் மதிப்பு சுமார் ஆறு லட்சம் ஆகும். குற்ற செயல்களை துரிதமாக செயல்பட்டு கண்டுபிடித்த திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர் ஜெயா, சேதுபவாசத்திரம் காவல்ஆய்வாளர் சக்திவேல், காவல் உதவி ஆய்வாளர் தனிப்படை மற்றும் காவலர்களை அதிகாரிகள் பாராட்டினார்கள்.
சங்கீதா மற்றும் முருகராஜ் தம்பதியினர் தனது மகளை பட்டுக்கோட்டையில் உள்ள இசபெலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர்ப்பதற்காக ஜூன் 24 அன்று காலை சுமார் 11.45 மணியளவில் கறம்பக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வந்தனர். பள்ளிக்கு செல்லும் வழியில் முருகராஜ் தம்பதியினர் ரூ 1.5 லட்சம் பணப்பையை தொலைத்தனர். இதற்கிடையில் பெயின்டர்களான ராஜ்குமார், சரண்ராஜ் ஆகியோர் கையில் பணப்பை கிடைத்தது. அவர்கள் பட்டுக்கோட்டை டிஎஸ்பி முகாம் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பெற்றோரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. கிடைத்த பணத்தை நேர்மையாக ஒப்படைத்த பெயின்டர்களை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17.06.2022 அன்று பட்டுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்காக இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. தஞ்சையில் உள்ள அகர்வால் மருத்துவமனை மருத்துவர்கள் வந்து இந்த முகாமில் பணியாற்றினர். அதிராம்பட்டினம் காவல்ஆய்வாளர் அண்ணாதுரை, சேதுபவாசத்திரம் காவல்ஆய்வாளர் சக்திவேல், திருச்சிற்றம்பலம் காவல்ஆய்வாளர் திருமதி ஜெயா, பேராவூரணி காவல்ஆய்வாளர் திருமதி செல்வி மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், குடும்பத்தினர் ஆகியோர் இந்த முகாமில் பங்கேற்றனர்.
மேலும் கடந்த மாதம் இருபத்தி எட்டு மற்றும் இருபத்தி ஒன்பதாம் தேதிகளில் கடலோர பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது இதில் சுமார் 200 காவலர்கள் கலந்து கொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
கடந்த 3ஆம் தேதி பட்டுக்கோட்டை வட்டம் திருச்சிற்றம்பலம் அன்னை செட்டிநாடு மெஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஓட்டலில் மாஸ்டராக பணி புரிந்து வந்தவர் அந்த ஹோட்டலை ஒரு வருட குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தார் இதில் உரிமையாளருடன் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறில் உரிமையாளரால் தாக்கப்பட்ட தோடு தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசப்படதாலும் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த செய்தி அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல் துணை கண்காணிப்பாளர் திரு சுபாஷ் சந்திர போஸ் மற்றும் திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி ஜெயா துரிதமாக நடவடிக்கை எடுத்து தற்கொலைக்கு தூண்டிய ஹோட்டல் உரிமையாளர்களை கைது செய்து போராட்டக்காரர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதுபோன்று பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற நாள் முதல் திரு சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தன்னுடைய திறமையையும் அனுபவத்தையும் ஒருசேர இணைத்து மக்கள் பணியாற்றுவதால் சக காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளதோடு வெகுவான பொது ஜனங்களின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்.
பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருந்தாலும் தனது பொறுப்புகளை அறிந்து செயல்படும் திரு சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு பொது மக்கள் சார்பாகவும் நீதியின் நுண்ணறிவு குழுமத்தின் சார்பாகவும் நன்றிகளும் வணக்கங்களும்.