ராமநாதபுரத்தில் மன வளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் கீற்று கொட்டகையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன் தனது சம்பளத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
ராமநாதபுரம் இந்திரா நகர் அருகில் முத்துராமலிங்க சுவாமி கோயில் தெருவில் கீற்று கொட்டகையில், கழிப்பறை, மின்சாரம் இல்லாத வீட்டில் வசிப்பவர் ராஜம்மாள் 65. இவருக்கு சத்தியப்பிரியா 25, சரஸ்வதி 23, ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இருவரும் மனவளர்ச்சி குன்றியவர்கள். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல சிகிச்சை பிரிவில் டாக்டர் பெரியார் லெனின் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
ராஜம்மாள் சித்தாள் வேலை செய்து இருமகள்களை காப்பாற்றிய நிலையில் தற்போது வயது மூப்பால் வேலைக்கும் செல்ல முடியாததால் இரு மகள்களுடன் தவிக்கிறார்.இரு மகள்களுக்கும் கிடைக்கும் தலா ரூ.1000 உதவித்தொகையில் தான் இவர்கள் உயிர் வாழ்கின்றனர். மூதாட்டி ராஜம்மாளுக்கு இதுவரை முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் மிகவும் சிரமத்தில் உள்ளனர். இவர்களின் நிலை அறிந்த ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன் தனது சம்பளத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.