போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் paytm QR Code மூலம் ஸ்கேன் செய்து, அபராதம் செலுத்தும் முறையை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 2018 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட E-Challan முறையில் அபராதப் பணம் வசூலிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், எனினும் போக்குவரத்து அழைப்பு மையங்கள் மூலம் விதிமீறலில் ஈடுபடுவோர்களை அணுகி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வந்ததாகவும் கூறினார்.
மேலும் E-Challan முறையில் 21 சதவீதம் மட்டுமே அபராதத் தொகை வசூல் செய்யப்பட்டதாகவும், போக்குவரத்து அழைப்பு மையங்கள் தொடங்கப்பட்ட பின் அபராத வசூல் 47 சதவீதம் ஆக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார். ஆனாலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அபராதம் செலுத்தாமல் இருந்து வரும் நிலையில், தற்போது Pay tm உடன் இணைந்து சென்னை போக்குவரத்து காவல் துறை QR Code மூலம் சம்பவ இடத்திலேயே அபராதத் தொகையை வசூல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இது தவிர விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விதிமீறல் மற்றும் அதற்கான அபராதத் தொகை அடங்கிய முழு தகவலுடன் குறுஞ்செய்தி அனுப்பும் Bulk SMS முறையும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.