தமிழகத்தில் முதன் முறையாக ரவுடியை சுட்டுப்பிடித்த பெண் ஆய்வாளர் மீனாவுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் யார் என்பது குறித்து பார்ப்போம்..
சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் என்பவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் உதவி ஆய்வாளரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதைத்தொடர்ந்து அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தலைமை காவலர் அமானுதீன், காவலர்கள் சரவணன், திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்ட கௌதம் மற்றும் அஜித் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் உதவி ஆய்வாளர் சங்கரை தாக்கிய பெண்டு சூர்யாவை பிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனது அக்கா வீட்டில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படையினர், அவரை கைது செய்து அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென பெண்டு சூர்யா கேட்டத்தை அடுத்து நியூ ஆவடி சாலையில் இருக்கும் ஆர்டிஓ அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது இளநீர் கடை அருகே பதுக்கி வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் அமானுதீன் மற்றும் சரவணன் ஆகியோரை வெட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கியை காட்டி எச்சரிக்கை விடுத்த போதும் கையில் இருந்த கத்தியால் காவலர்களை மீண்டும் தாக்க முற்படும்போது உதவியாளர் மீனா பெண்டு சூர்யாவின் இடது கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி பெண்டு சூர்யாவை பிடித்தார்.
காவலர்களை கத்தியால் தாக்கி தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடியை தமிழகத்திலேயே முதன் முறையாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சுட்டு பிடித்திருப்பது தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. மேலும், துரிதமாக செயல்பட்டு ரவுடியை சுட்டு பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மீனாவை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.
பத்து நாட்களுக்கு முன்பு அயனாவரம் பகுதியில் நடந்து சென்ற நபரை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற சம்பவத்தில் அன்று இரவுக்குள்ளாகவே சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து ஆகாஷ், சுபாஷ், பிரவீன் ஆகிய மூன்று குற்றவாளிகளை தனியாக சென்று கைது செய்து வந்துள்ளார். இந்த சம்பவத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவல் உதவி ஆய்வாளர் மீனாவை அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.