தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி. இவர், பணி ஓய்வுபெறுகிறார். வார இறுதி நாட்களில் டிஜிபி கந்தசாமி ஓய்வுபெற இருப்பதால் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பிரிவு உபசார விழா எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு வந்த டிஜிபி கந்தசாமிக்கு காவல்துறையினர் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தனர். டிஜிபி சைலேந்திரபாபு, கந்தசாமிக்கு பூங்கொத்து மற்றும் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
பிறகு மைதானத்தில் குதிரைப்படையினர், பேரிடர் மீட்பு படையினர், பெண்கள் கமாண்டோ அணியினர், தமிழ்நாடு ஆண்கள் சிறப்பு அணியினர், அதிவிரைவு படையினர், தமிழ்நாடு கடலோர காவல்படையினரின் அலங்கார அணி வகுப்பு நடந்தது.
அந்த அணிவகுப்பு மரியாதையை டிஜிபி கந்தசாமி ஏற்றுக்கொண்டார். விழாவில், அவர் பேசியதாவது: இந்த உலகத்தில் அரசு, தனியார் என எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அதில் பணிபுரியும் 20 சதவீத ஊழியர்கள் நேர்மையாகவும் கடின உழைப்பு செய்பவர்களாகவும் நிறுவனத்திற்கு உறுதுணையாகவும் இருப்பார்கள். அதில் 10 விழுக்காட்டினர் நம்பிக்கையற்றவர்களாகவும், பொறுப்பற்றவர்களாகவும் இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ஒரு வழிகாட்டியை நாடி இருப்பார்கள். பணியின் போது நீங்கள் அர்ப்பணிப்புடன் நேர்மையாக இருந்தால் மீதமுள்ளவர்கள் உங்களை பின்தொடர்வார்கள்.
நான் ஒரு இந்தியனாகவும் தமிழனாகவும் இருப்பதற்கு பெருமை கொள்கிறேன். காவல் நிலையத்தில் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். தகுதிகளை பார்த்து ஒருவரை கீழே அமர வைப்பதும், ஒருவரை மேலே அமர வைப்பதும் கூடாது. மக்கள் பேசுவதை கவனித்து கேட்க வேண்டும். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்கள் சொல்வதை நாம் கவனித்துக் கேட்க வேண்டும். ஒரு காவலர் எப்பொழுதும் திட்டமிடுதலில் மாற்று திட்டம், ஒன்றை ஏதாவது வைத்துக் கொள்ள வேண்டும். என் பணிக்காலத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் என காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.