தஞ்சாவூர் மாவட்டத்தில் போக்குவரத்து காவல்துறையின் சார்பில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வரும் பெண்கள் ஹெல்மெட் அணிவதை ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை காவல்துறையினர் சார்பில் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வழக்கம்போல் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களை போலீசார் நிறுத்தினர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்ததற்காக வெள்ளி நாணயத்தைப் பரிசாக அளித்தனர். போக்குவரத்து போலீசாரின் இந்த செயலானது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.