சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புறநகர் பேருந்து நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உட்பட பிற அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் உள்ளிட்ட விவரங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “மிகப்பெரிய பேருந்து முனையமாக இந்த பேருந்து முனையம் அனைத்து வசதிகளுடன் சி.எம்.டி.ஏ-வால் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை (SETC) பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்து தென் தமிழ்நாடு பகுதிகளுக்குச் செல்லும். பெங்களூர், கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு (ECR) செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும்.
அதேபோல, தென் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பேருந்துகள் அத்தனையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் முதல் பேருந்து நாளை காலை 4 மணி அளவிலே கோயம்பேட்டுக்கு வரும். அதற்குப் பிறகு வருகின்ற அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்குதான் வரும், கோயம்பேட்டுக்கு செல்லாது. எனவே, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை முழுமையாக நாளையிலிருந்து கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாள்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாள்களில் 360 புறப்பாடுகளும் கொண்ட அரசு விரைவு போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்துகள் அத்தனையும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.
அதேபோல, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் டிசம்பர் 31-ம் தேதி காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். ஏற்கெனவே உள்ள வழித்தடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற பேருந்துகளைத் தாண்டி, கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு கிளாம்பாக்கத்திலிருந்து 270 நடைகள் இயக்கப்படும்.
ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இங்கிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குச் செல்லும். அதேபோல தாம்பரம் செல்கின்ற பேருந்துகள் 2 நிமிடத்துக்கு ஒரு பேருந்து கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு புறப்படும். கிளாம்பாக்கத்திலிருந்து கிண்டிக்கு செல்லும் மாநகர போக்குவரத்து பேருந்துகள் மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இயக்கப்படும். ஏற்கெனவே இந்த வழித்தடத்தில் 2,386 நடை பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது கூடுதலாக 1,691 நடை பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. எனவே, மொத்தம் 4077 நடைகள் கிளாம்பாக்கத்தின் இந்த வழித்தடத்திலே இயக்கப்படும்.
அதேபோல, இந்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய அரசு போக்குவரத்துக் கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்குப் பிறகு அந்த அத்தனை பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.
அதேபோல ஆம்னி பேருந்துகள் இன்றைக்கு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து தங்களுடைய செயல்பாட்டினை தொடங்கிவிட்டன. ஏற்கெனவே அவர்களுக்கு டிக்கெட் புக்கிங் ஆகியுள்ளதன் காரணத்தால், பொங்கல் வரை சென்னை நகரத்திலிருந்து இயக்கப்படும். பொங்கலுக்குப் பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து அந்த ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்.
எனவே, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை நாளையிலிருந்தே முழுமையான செயல்பாடு இங்கிருந்து தொடங்கும். மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரை நாளை காலையிலிருந்து இங்கிருந்து சென்னை மாநகரத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படும். அரசு போக்குவரத்துக் கழகத்தின் மற்ற ஆறு போக்குவரத்துக் கழகங்கள் பொங்கல் வரை கிளாம்பாக்கம் வழியாக செல்பவை, பொங்கலுக்குப் பிறகு முழுமையாக கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். அதேபோல ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து முழுமையாக இயக்கப்படும்” என்றார்.