துரைப்பாக்கம், பெருங்குடியைச் சேர்ந்தவர் ரவீந்தர்சிங், 45; கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். ஓ.எம்.ஆரில் மேட்டுக்குப்பத்தில் இருந்து பெருங்குடி நோக்கி, காரில் சென்று கொண்டிருந்தார்.
துரைப்பாக்கம் அருகில் சென்றபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரால் கார் ஓட்ட முடியவில்லை. கார் நடுரோட்டில் நின்றது.
அங்கு வந்த துரைப்பாக்கம் போக்குவரத்து போலீசார், அவரை காரில் இருந்து இறக்கி தண்ணீர் கொடுத்தனர். இருந்தும், அவரால் சகஜ நிலைக்கு வர முடியவில்லை.
உடனே, ஆம்புலன்ஸ் வரவழைத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். உடன், போலீஸ் இருந்து கவனித்தனர். பின், அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு வரவழைத்தனர். உரிய நேரத்தில் சேர்த்து, ரவீந்தர்சிங் உயிரை காப்பாற்றிய போலீசாருக்கு, அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்தனர்.