தமிழக காவல்துறையில் 38 ஆண்டுகள் நேர்மையாகவும், பொறுப்புணர்வுடனும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு.ரெ.சந்திரசேகர் டி.எஸ்.பி அவர்கள். 2019 முதல் 2023 வரை 5 ஆண்டுகள் அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கல்லூரி காலத்திலேயே கபடி வீரராக திகழ்ந்தவர். காவல்துறையில் பணிபுரிந்த போது 1990 முதல் 95 வரை தென்னிந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டு முறை தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றவர். 1991ல் நடந்த அகில இந்திய கபடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவர். இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து காவல்துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றவர். அவரை சந்தித்தபோது தனது பணிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
எனது சொந்தஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள உடையார் கோவில் ஆரம்ப கல்வியை இங்குள்ள அரசு பள்ளியிலேயே முடித்தேன். கல்லூரி படிப்பை பூண்டி கல்லூரியில் முடித்தேன். எனது ரோல் மாடல் திரு. W.I. தேவாரம் IPS Rtd அவர்களே. ஒருமுறை கபடி போட்டியின் போது ஒரு காவலருக்கு பலத்த அடிபட்டு விட்டது. அதுபற்றி தேவாரம் அவர்களிடம் தெரிவித்த போது ஒரு டிஎஸ்பியிடம் ரூபாய் 10,000 கொடுத்து மருத்துவ செலவை பார்க்க சொன்னார். மற்றொருமுறை ஒரு போட்டியின் போது ஒரு டிஎஸ்பி திருச்சி ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். ஏனென்றால் அவரும் சென்னையை சேர்ந்தவர். இதைப்பற்றி தேவாரம் அவர்களிடம் தெரிவித்த போது அவரே நேரடியாக கண்காணித்து முறைப்படி திருச்சி ராஜேந்திரனை வெற்றி பெற்றதாக அறிவித்தார். இச்சம்பவங்களிலிருந்து அவருடைய நேர்மையும், மனிதாபிமானமும் எனக்கு பிடித்தது.
2013ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் நான் சட்டபோதகராக பணியாற்றியபோது புதிய (D.P.O) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டது. அங்கே மரங்கள் இல்லாமல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இதுபற்றி அப்போதைய எஸ்பி திருமதி.ராதிகா IPS அவர்களிடம் ஆலோசித்து D.P.O சுற்றி சுமார் 250 மர கன்றுகளை நட்டு அதற்கு D.C, H.C, S.I என்று பெயர் வைத்து பராமரிக்க செய்தேன். இன்று D.P.O பசுமையாக காட்சியளிக்கிறது. நான் அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டிஎஸ்பியாக பணிபுரிந்த போது 2020 வருடம் DVACயிடமிருந்து எனக்கு ஒரு உத்தரவு வந்தது. அது என்னவென்றால் ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் வழக்கு பதியப்பட்டு நீண்டநாட்களாக நிலுவையில் இருந்தது. அதை புலனாய்வு செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு எஸ்.பி. (காவல் கண்காணிப்பாளர்) இருந்தாலும் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் எஸ்.பி ரேங்கில் உள்ள அதிகாரியாக இருந்தாலும் துணிவுடன் செயல்பட்டு அவர்மீது குற்றப்பத்திரிகை ஈரோடு தனிநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். தற்போது நீதிமன்ற விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காடம்புலியூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த போது பணிக்கன்குப்பம் மெயின்ரோட்டில் முந்திரிமரம் அருகில் பிறந்த 6 நாட்களே ஆன குழந்தை கிடந்தது. அதைச் சுற்றி சுமார் 30 நபர்கள் நின்றிருந்தனர். ஆனால் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது முதலில் பணியிலிருந்த மருத்துவர்கள் மறுத்தபோதும் பின்னர் தாசில்தார் அனுமதி கடிதம் வழங்கியதும் மருத்துவ உதவி வழங்கினார்கள். பின்னர் குழந்தைகள் நல காப்பகத்திடம் ஒப்படைத்தனர். இதன் பின்னரே தமிழக அரசால் தொட்டில் குழந்தை திட்டம் அறிவிக்கப்பட்டது.
நான் காவல்துறையில் 38 ஆண்டுகள் பல கடினங்களுக்கிடையே பணியாற்றியது மனநிறைவாக உள்ளது. வருங்காலத்தில் சிறந்த கபடி வீரர்களை உருவாக்கி அகில இந்திய அளவில் பரிசுகளை வெல்ல வேண்டும் என்பதே எனது கனவு என்று முடித்துக் கொண்டார்.