திருப்பூர் : தாராபுரத்தில், ஏ.டி.எம்., மையத்தில் கிடந்த, 3 லட்சம் ரூபாயை மீட்ட போலீசார், ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதற்காக, சம்பந்தப்பட்ட போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த, 23 ம் தேதி இரவு ரோந்து பணியில் போலீஸ்காரர் முகமது அப்துல்லா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் சிவா ஆகியோர், தாராபுரம் – பொள்ளாச்சி ரோடு தாசர்பட்டியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கிருந்த ஏ.டி.எம்., மையத்தை கண்காணித்த போது, அங்கு கேட்பாரற்று கிடந்த, 3 லட்சம் ரூபாய் பணக்கட்டை மீட்டு ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், வங்கி ஊழியர்கள் ஏ.டி.எம்., இல் பணம் நிரப்பும் போதும், அதனை தவறுதலாக விட்டு சென்றது தெரிந்தது. விழிப்புடன் பணியாற்றி, நேர்மையாக செயல்பட்டு பணத்தை ஸ்டேஷனில் ஒப்படைத்த, இருவரையும் எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.