கோவை மாவட்டம் பல்லடம் பகுதியில் வசிக்கும் முத்து ஜெயந்தி (46) என்பவர் கடந்த 14.11.2024 அன்று பொள்ளாச்சியில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக பல்லடம் பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி பார்த்தபோது அவரது பையிலிருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து, மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெகமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி திருட்டு வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொண்டும், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புலன்விசாரணை செய்து வந்த நிலையில், (03.12.2024) தனிப்படையினர் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கனகராஜ் (45) மற்றும் பழனிச்சாமி மகன் ராமலிங்கம் (37) ஆகியோர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி திருட்டு வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதன் பேரில், கனகராஜ் (45) மற்றும் ராமலிங்கம் (37) ஆகியோர்களை கைது செய்தும்,மேலும் மேற்படி நபர்கள் பொள்ளாச்சி கிழக்கு, பொள்ளாச்சி மேற்கு மற்றும் மகாலிங்கபுரம் காவல் நிலைய பகுதிகளில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.இந்நிலையில் அவர்களிடமிருந்து மேற்படி வழக்குகளின் சொத்துக்களான சுமார் 28 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 50,000/- பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.